249. அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்
இறைவன் வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
இறைவி வேற்கண்ணியம்மை, பாலாம்பிகை
தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்
தல விருட்சம் வெள்வேல் மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருவேற்காடு, தமிழ்நாடு
வழிகாட்டி சென்னையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவேற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு Thiruverkadu Gopuramவேல மரங்கள் நிறைந்த பகுதியாதலால் இத்தலம் 'வேற்காடு' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்து இறைவன் 'வேற்காட்டீசர்' என்றும், வேதங்கள் பூசித்ததனால் 'வேதபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.

இமயத்தில் சிவபெருமானுக்கும், இமவான் மகளான பார்வதி தேவிக்கும் நடைபெற்ற திருமணத்தைக் காண மகாவிஷ்ணு, பிரம்மதேவன், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், திருக்கயிலை பூதகணங்களும் திரண்டனர். மொத்த தேவலோகமும் ஒன்றாகத் திரண்டதால் பூமித்தாயின் வடபாகம் ஒரு பக்கம் சாய்ந்து விட்டது. அதைச் சமன்படுத்த அகத்திய முனிவரை தென்பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

அகத்தியர் தென்பகுதியான பொதியமலைக்குச் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வரும்போது இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே அருளியபடி தமது திருமணக் கோலத்தைக் காட்டியருளினார். அதை நினைவுப்படுத்தும் வகையில், இக்கோயிலின் மூலவரான லிங்கமூர்த்தத்தின் பின்புறம் சிவபெருமான், பார்வதி தேவியோடு திருமணக் கோலத்தைக் காட்டிய நிலையில் உள்ளார். விநாயகப் பெருமானும் உடன் உள்ளார்.

Thiruverkadu Moolavarமூலவர் 'வேதபுரீஸ்வரர்', 'வேற்காட்டீசர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அவரின் பின்புறம் சிவபெருமான், பார்வதி தேவியோடு திருமணக் கோலத்தில் உள்ளார். விநாயகப் பெருமானும் உடன் உள்ளார். அம்பாள் 'வேற்கண்ணியம்மை', 'பாலாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் சண்டேஸ்வரரின் பின்புறம் மற்றொரு சண்டேஸ்வரர் உள்ளார். பிரகாரத்தில் அகத்தியர், மூர்க்க நாயனார், விநாயகர், அறுபத்து மூவர், சன்னதி விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அனபாய சோழன், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், சூரியன், நவக்கிரகங்கள், சந்திரன், சனிபகவான், பைரவர், நாகராஜர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இக்கோயிலில் முருகப்பெருமான் நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் பாலசுப்ரமணியனாக காட்சி தருகின்றார். சூரபத்மனை வதம் செய்தபின் முருகப் பெருமான் இத்தலத்திற்கு வந்து தமது வேலாயுதத்தால் தீர்த்தம் உண்டாக்கி, பின்னர் லிங்கம் அமைத்து பூஜை செய்து வழிபட்டதாகத் தலபுராணம் கூறுகிறது. எனவே, பாலசுப்ரமணியருக்கு முன் லிங்க மூர்த்தியும் உள்ளார்.

Thiruverkadu Praharam63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் இத்தலத்தில் அவதரித்து அடியவர்களுக்கு அன்னதானம் செய்து, பணம் இல்லாதபோது சூதாடி பணம் பெற்று அன்னதானம் செய்து முக்தி பெற்றார்.

ஆதிசேஷன் வந்து வழிபட்டு இத்தலத்தின் எல்லை வரை இருப்பவரை தீண்ட மாட்டேன் என்று கூறியதால் இத்தலம் 'நஞ்சு தீண்டாத் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, பாம்பு போன்ற விஷமுடைய ஜந்துக்களினால் பயம் ஏற்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடலாம்.

திருமால், முருகப் பெருமான், ஆதிசேஷன், பராசரர், அத்திரி முனிவர், பிருகு முனிவர், ஆங்கீரசர், வசிஷ்டர், கவுதம முனிவர், காசியபர் ஆகியோர் வழிபட்ட தலம்.

Thiruverkadu Utsavarஇத்தலத்து வேற்கண்ணியம்மையும், திருவலிதாயம் (பாடி) ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும் ஒரே நாளில் கண்டு வழிபடுவது சிறப்பாகும். இது பண்டை காலம் தொட்டு நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com